search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணனுக்கு ஜே விமர்சனம்"

    ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ், மகிமா, மயில்சாமி, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ விமர்சனம். #AnnanukkuJey #AnnanukkuJeyReview
    பனைமரத்தில் இருந்து கள் இறக்கும் வேலையை குடும்பத் தொழிலாக செய்து வருகிறார் மயில்சாமி. மகன் தினேஷ் வேலைக்கு வைத்து அவருக்கான கூலியையும் அதிகம் வழங்குகிறார். டுடோரியல் காலேஜில் படித்து வரும் மகிமாவை தினேஷ் காதலிக்கிறார். மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் உள்ளூர் அரசியல் பிரமுகரும், பார் உரிமையாளருமான தினா குறுக்கிடுகிறார். 

    அரசியல் பலம் இல்லாததால் கண்முன்னேயே அப்பாவை அடித்துவிட்டார்கள் என்ற விரக்தியில் அவரை அரசியலில் ஆளாக்க நினைக்கிறார் தினேஷ். அதற்காக ராதாரவியின் ஆலோசனைப்படி லட்சக்கணக்கில் செலவு செய்கிறார். இந்த சூழலில் கள் இறக்கும் உபகரணங்கள், இடம் என எல்லாவற்றையும் தீயிட்டு எரித்து சின்னாபின்னமாக்குகிறார் தினா. 

    இதனால் கோபமடையும் தினேஷ், தினாவை பழிவாங்கினாரா? அப்பாவுக்கு அரசியலில் பதவி வாங்கிக் கொடுத்தாரா? காதலியைக் கரம் பிடித்தாரா? அரசியல் வாய்ப்பு அவருக்கு எப்படி வருகிறது என்பதே படத்தின் மீதிக்கதை. 



    இந்த படத்துக்கு அட்டகத்தி பார்ட் 2 என்று பெயர் வைத்திருக்கலாம். அட்டகத்தி கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தினேஷும் சிறப்பாக நடித்து இருக்கிறார். மகிமாவுக்கு வழக்கமான கதாநாயகிகளைவிட அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம்.

    ராதாரவி சிரிப்பாலேயே வில்லத்தனம் காட்டுவது அனுபவ நடிப்பு. மயில்சாமி, ஜானி ஹரி, தீனா, தங்கதுரை ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக வழங்கி இருக்கிறார்கள்.

    படத்தின் பெரிய பலம் அரோல் கரோலியின் இசை. பாடல்களும் பின்னணியும் ரசிக்க வைக்கிறது.



    அட்டகத்தியாகவே கடைசி வரை இருந்து வெல்லும் கதாநாயகனின் கதை. உள்ளூர் அரசியலை களமாக எடுத்து ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக கணிக்க முடிவது பலவீனம். தாராளமாக செலவழித்து இன்னும் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருந்தால் அண்ணனுக்கு ஜே முக்கியமான அரசியல் படங்களில் ஒன்றாகி இருக்கும்.

    மொத்தத்தில் ‘அண்ணனுக்கு ஜே’ காமெடிக்கு ஜே.
    ×